கொதிகலன் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் இயங்கி வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது பிரிவில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள இரண்டு பிரிவுகள் மூலம் நாளொன்றுக்கு 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப். 8ம் தேதி இரவு, முதல் பிரிவில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி ஆகிறது. கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு சரி செய்யப்பட்ட பிறகு, முதல் அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கப்படும் என மேட்டூர் அனல்மின் நிலைய பொறியாளர் ஒருவர் கூறியுள்ளார்.