Skip to main content

200வது நாளைத் தொடும் வேங்கைவயல் விவகாரம்; 4 சிறுவர்களை நேரில் வரச் சொன்ன நீதிபதி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

200th Anniversary of Vengaiyal Affair; 4 Objections to DNA testing of children

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் நடந்து 199 நாட்கள் ஆகிவிட்டன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் 179வது நாளாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதுவரை 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 10 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் வேங்கைவயல் வழக்கு விவகாரம் தொடர்பாக மேலும் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி வேண்டும் எனக் கேட்கப்பட்டு வழக்கு வரும் 12ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 12ம் தேதி (இன்று) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்து வர நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி சிறுவர்களின் பெற்றோர்கள் ஆஜராகினர். அப்பொழுது வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் தங்களுக்கு ரத்த மாதிரி கொடுக்க விருப்பமில்லை. பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நாங்கள் ரத்த மாதிரி கொடுக்க முடியாது என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றவர்களிடம் நீதிபதி ஜெயந்தி விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது, “உங்கள் பிள்ளைகளை கூட்டிவரச் சொன்னோம். ஏன் கூட்டிவரவில்லை” எனக் கேட்க, “பசங்க பள்ளிக்கூடம் போய்ட்டாங்க” எனக் கூறினர். “வரும் 14ம் தேதி 4 சிறுவர்களை நேரில் அழைத்து வர வேண்டும். அந்த சிறுவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு தான் அந்த நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாமா அல்லது கூடாதா என உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ஏற்கனவே என்னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார். இருப்பினும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

BJP Treasurer SR Shekhar CBCID Police Interrogated 

அப்போது நீதிபதி எஸ்.ஆர்.சேகரை சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் அவரது செல்போனை ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசார் வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (11.07.2024) காலை ஆஜரானார். காலை 10.30 மணிக்கு ஆஜரானவரிடம் மாலை 06.30 மணி வரை என அவரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரிடம் 190 கேள்விகளை சிபிசிஐடி போலீசார் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புதுக்கோட்டையில் ரவுடி சுட்டுக் கொலை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trichy MGR nagar Durai incident at Pudukottai

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை. ரவுடியான இவர் மீது 70க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடிய வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது துரை தான் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் தற்காப்புக்காக இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றவர் ஆவார். மேலும் காவல் ஆய்வாளார் உள்ளிட்ட 5 காவலர்கள் துரை தாக்கியதில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.