சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வக்கீல் குரு முருகானந்தம் என்பவர் தனது அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்குத் தமிழகம் முழுக்க வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், வக்கீல்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வலியுறுத்தியும் ஜெக் என்ற ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் 7 ந் தேதி ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று 7 ந் தேதி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஈரோடு சம்பத் நகர், பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை ஆகிய நீதிமன்றங்களில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக பணிகள் பாதிக்கப்பட்டன. ஈரோடு அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் ஜெய கோவிந்தன் கூறும்போது, “மானா மதுரையில் வக்கீல் குரு முருகானந்தம் என்பவர் சில சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டோம். வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு கேட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.