2 raiders passed away in encounter

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர்பிரபாகரன் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று (26-12-23) காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து நடந்து சென்ற போது ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கதீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதனையடுத்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த நிலையில், பிரபாகரனை கொலை செய்த ரகு மற்றும் ஹசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது, ரகு மற்றும் ஹசன் ஆகியோர் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மீட்கப்ப்ட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment