Skip to main content

2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்; ரூ.710 கோடியில் வாய்க்கால்; விவசாயிகளின் கோரிக்கையும் நீதிமன்றத்தின் உத்தரவும்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

2 lakh 7 thousand acres; Drainage at Rs.710 crore; Demand of farmers and order of court

 

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதை  விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

 

ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது கீழ்பவானி வாய்க்கால். 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் இந்த கால்வாயானது மண் கால்வாயாகும். இந்த வாய்க்காலின் கசிவு நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் அதன் கரைகள் மற்றும் மதகுகள் சிதிலமடைந்துள்ளன. இதனால் வாய்க்காலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்காலை புனரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டது.

 

கடந்த 2021 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கிய நிலையில் புனரமைப்பு திட்டத்திற்கு விவசாயிகளின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். வாய்க்காலில் காங்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மற்றொரு தரப்பு விவசாயிகளோ வாய்க்காலின் கரைகள் பலமிழந்து அவ்வப்போது ஏற்படும் உடைப்பால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து இருதரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.

 

வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்பவானி பாசன வாய்க்கால் புனரமைப்பு பணிகளை வரும் மே மாதம் முதல் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆயக்கட்டு பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்க நிர்வாகிகள் பொன்னையன், பெரியசாமி ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும், தீர்ப்புக்கு ஒத்துழைத்த தமிழ்நாடு முதல்வர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி வாய்க்கால் புனரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

‘ஷேக் ஷாஜகானை கட்டாயம் கைது செய்ய வேண்டும்’ - மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
- Court orders West Bengal government to Sheikh Shahjahan must be arrested

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. 

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (26-02-24) நடந்தது. அப்போது, ‘சந்தேஷ்காலி பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 42 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான்கு ஆண்டுகளாகக் கைது செய்யப்படாதது ஆச்சரியமாக உள்ளது. கைதுக்கு இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட வேண்டும்’ என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.