Skip to main content

17 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்கள்; ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் சிகிச்சை 

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
17 people were bitten by rabid dogs in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கம் கடைவீதியில் வியாழக்கிழமை(8.2.2024) மாலை வெறி நாய் ஒன்று கடைவீதிக்கு வந்தவர்களை கால்களில் கடித்து குதறியது. நாய் கடித்ததும் ரத்தம் கொட்ட கொட்ட கதறிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதனையடுத்து சற்று நேரத்திற்குள் தென்நகர் பகுதியில் ஒரு நாய் இதே போல அடுத்தடுத்து பலரை கடித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் கறம்பக்குடி பகுதியே பரபரப்பாகவும் பதைபதைப்பாகவும் இருந்தது. 

இதில் கறம்பக்குடி இந்திரா நகர் பார்த்திபன் (35), புதுப்பட்டி சரவணகுமார் (41), மாரிமுத்து (44), தட்டாவூரணி கௌரி (25), பேராவூரணி கறம்பக்காடு ஓமவயல் சூரியமூர்த்தி (70), வெட்டன்விடுதி வினோத்குமார் (30), ஆலங்குடி லோகநாதன் (47), அங்கன்வாடி சுபாஷ் (15), தென்நகர் அம்பிகா (31), சின்னையன் (63), விஜயராமன் (68), சுக்கிரன்விடுதி சுரேஷ்குமார் (45) உள்பட 17 பேர் காயமடைந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று காயங்களுக்கும் மருந்துகள் கட்டிய பிறகு 12 பேரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே ஊரில் 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் வேதனையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தனை பேரை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே பீதியடைந்துள்ளனர். 

இதே போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 4 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் குதறி கொன்று போட்டதைப் பார்த்து விவசாயி கதறி அழுதார்.

தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து ஏராளமான விபத்துகளுக்கு காரணமாவதுடன் கால்நடைகளையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. மேலும் கறம்பக்குடி போல மனிதர்களையும் கடித்துக் குதறி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.