Skip to main content

சிதம்பரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
vaitheswarai

 

சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வந்த மணிமாறன் மகள் வைத்தீஸ்வரி (16)  ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர். இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.  இவர் சனிக்கிழமை வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று ஒரத்தூர் போலீசில் ஞாயற்று கிழமை புகார் செய்தனர்.

 

இந்நிலையில் செவ்வாய் அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள்  வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடலமாக கிடந்ததை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர் அவரது உடலை பார்த்து கதறிஅழுதனர். இதனையறிந்த ஒரத்தூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து  வைத்தீஸ்வரியின் பெற்றோர் கூறுகையில், அதே கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக கூறுகின்றனர். காவல்துறையினரோ ஆய்வு அறிக்கை வந்தால் தான் எதையுமே கூறமுடியும் என்கிறார்கள்.

 

சம்பவ இடத்தை பார்வையிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் துறையினர்  இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சார்ந்த 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தை கண்டித்து வைத்தீஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிதம்பரம்- சேத்தியாதோப்பு சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

 

இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவகொலைகள், சிறுமி பாலியல்கொடுமை, கொலைகள் நடந்து வருகிறது. இதற்கு காவல்துறையினர் சரியான தண்டனை வாங்கி கொடுத்து இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காது. எனவே இந்த பெண் கொலைக்கான காரணத்தை காவல்துறையினர் நன்கு விசாரணை செய்து சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான தண்டனை கிடைக்குமாறு செய்யவேண்டும் என்றார்.

 

- காளிதாஸ்

 

 

சார்ந்த செய்திகள்