Skip to main content

16 குழந்தைகள் இலக்கு.. 12 வது குழந்தையுடன் மாயமான கர்ப்பிணியை தேடும் சுகாதார துறை

aa

    

நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று அரசாங்கம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வந்தாலும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்ற இலக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை செல்வங்களை பெற்றுக் கொள்வது வழக்கமாகிவிட்டது. 


    இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி என்பதை அறிந்தவுடனேயே மருத்துவமனைக்கு சென்று சத்து, மாத்திரை, மருந்து என்று மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் அத்தனையும் வாங்கிச் சாப்பிட்டாலும் கடைசியில் பிரசவம் அறுவை சிகிச்சை தான் என்ற நிலை உள்ளது. 
    ஆனால் ஒரு தம்பதிக்கு இதுவரை 11 குழந்தைகளும் சுயப்பிரசவமாக பிறந்த நிலையில் 12 வது குழந்தைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய சென்ற இடத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் இதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை சொன்னதால் 52 வயது கர்ப்பிணியும் அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டனர். ஊர் ஊராக தேடிய சுகாதார துறையினர் மாயமான கர்ப்பிணியை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 


    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். அவரது மனைவி ஆராயி (52). இவர்களைத் தான் போலிசாரும் சுகாதார துறையிரும் தேடி வருகிறார்கள். ஆனந்தன் -  ஆராயி தம்பதிக்கு இதுவரை விஜயா, கலா, போதும்பொண்ணு, ஹரிகரன், மாதவன், காளிதாஸ், கரிகாலன், முனீஸ்ரன் உள்பட 9 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகள் இறந்துவிட்டனர். 12 வது குழந்தையாக தற்போது கர்ப்பமாக உள்ளார். இதில் மாதவன் உள்ளிட்ட 4 பேருக்கு திருமணம் நடந்துவிட்டது. இத்தனைக்கு 10 அடி நீளம், 6 அடி அகலத்தில் உள்ள சின்னஞ்சிறிய பாதி மண் சுவர் வைக்கப்பட்ட கூரை வீடு. இதில் தான் அத்தனைபேரும் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த மாதவனும் அந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர்களின் தொழில் பறவைகள் வேட்டையாடுவது, பன்றி வளர்ப்பது தான். இத்தனை குழந்தைகளும் மருத்துவமனை துணையின்றி சுயபிரசவமாக தான் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் 12 வதாக வயிற்றில் உள்ள குழந்தைக்காக கடந்த 4 ந் தேதி சிங்கவனம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சென்ற ஆராயிக்கு ரத்தம் குறைவாக உள்ளது, தொடர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். பிரசவம் மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் அதனால் தங்க வேண்டும் என்று சொன்னதால் சில நாட்கள் அங்கு தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கும் செல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டனர். 12 வது குழந்தையுடன் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் பிரசவம் பிரச்சனையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக சுகாதார நிலைய மருத்துவர் குழு அவரை பல நாட்கள் இரவு பகல் வீட்டில் தங்கி இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் நாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


     இது குறித்து ஆராயியின் அம்மா.. எனக்கு 5 புள்ளைங்க தான் என் மகளுக்கு தான் 10 க்கும் மேல. இப்ப அவளுக்கு பிரசவம் நடந்த ஆபத்துன்னு ஆஸ்பத்திரியில சொன்னாகலாம். அன்னையில இருந்து எங்கே போனாங்கன்னு தெரியல என்றார்.
    அவரது உறவினர்களோ.. ஆனந்தன் – ஆராயி தம்பதிக்கு 16 புள்ளை பெத்துக்க ஆசை. அதில் 12 வது குழந்தை தான் வயிற்றில் இருக்கிறது. 11 வது குழந்தைக்கு ஆஸ்பத்திரிக்கு பிரசவம் பார்க்க போனாங்க. அங்கே ரொம்ப சிக்கலா இருக்கு ஆபரேசன் செய்யனும் என்று சொன்னதால அங்கிருந்து வீட்டுக்கு வந்து சுயபிரசவம் நடந்துச்சு. 11 குழந்தைகளும் சுயபிரசவம் தான். அதில் 2 குழந்தை இறந்துடுச்சு. 4 பேருக்கு மேல கல்யாணம் நடந்துருச்சு. 


    இப்ப 12 வது குழந்தைக்காக சும்மா செக்கப் போனாங்களாம். டாக்டர் உடம்பு தாங்காது. ரத்தம் பத்தாதுன்னு சொல்லி தங்க சொல்லி இருக்கிறார். அதை கேட்டதும் ஆபரேசன் செஞ்சுடுவாங்கன்னு நினைச்சு தப்பி வந்து ஊரைவிட்டே போயிட்டாங்க. இனி குழந்தை பிறந்த பிறகு தான் வரப் போறாங்க. 18 ந் தேதி குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார். தினமும் போலிசும், ஆஸ்பத்திரிகாரங்களும் வந்து தேடுறாங்க. ஒரு நர்சு இரவுல தங்கி இருந்து தேடினாங்க கிடைக்கல என்றனர்.


    மேலும்.. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தனுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனை வரை அழைத்துச் சென்ற நிலையில் அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இத்தனை குழந்தைகள் பிறக்கும் வரை வேடிக்கை பார்த்த சுகாதாரதுறை தற்போது சுயப்பிரசவம் பற்றிய பிரச்சனை எழுந்த்தும் ஆராயியை தேடுகிறது. இந்த முறையும் சுயமா குழந்தை பெத்துக்கும் தான் வருவாங்க. ஆனால் 16 குழந்தை பிறக்கும் வரை கருத்தடை செய்ய ஒத்துக்கமாட்டாங்க என்றனர்.


    சுயபிரசவம் சாத்தியமா? என்றால் கிராமங்களில் இயற்கை உணவுகளை உண்ணும் ஆராயி போன்ற பெண்களுக்கு சாத்தியமாகவே உள்ளது.