தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 நாட்களாக இணையவழி தனிநபர் போராட்டம் நடத்தி, இன்று தனிநபராக ஊர்வலமும் நடத்தியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 'முனைவர் ஜீவா' என்ற தனது முகநூல் பக்கத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் 1,500 தினங்களாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று டிசம்பர் 12 சனிக்கிழமை 1,500 வது நாள் நிறைவையொட்டி, பழைய பேராவூரணியில் இருந்து பேராவூரணி அண்ணா சிலை வரை தனிநபராக, சட்டையின் இருபுறமும் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து முனைவர் ஆ.ஜீவானந்தம் கூறும் போது,
"30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இதில் எவ்வித முடிவும் எடுக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிலுவையில் உள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி, முடிவு எடுத்து உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இணையவழியில் எனது முகநூல் பக்கத்தில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டேன். இன்று 1,500-வது நாள் என்பதால் நடைப்பயணம் வந்தேன்'' என்றார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி தனி நபர் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினார்.