நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சோதனையில் 14,96,900 ரூபாயும், 214 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கே.பி.பி.பாஸ்கர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி அன்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக, கே.பி.பி. பாஸ்கருக்கு தொடர்புடைய 30 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
அதில், 26,52,660 ரூபாயும், 1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும், நான்கு சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ஒரு கிலோ 680 கிராம் தங்க நகைகள், ஆறு கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புகள் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் வழக்கு தொடர்புடைய 14 லட்சத்து 96 ஆயிரத்து 900 ரூபாயும், 214 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.