தேனியில் கடந்த ஆறு மாதத்தில் 1,371 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 202 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் புதிதாக காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பிறகு, கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கைகள் கஞ்சா தடுப்பிற்காக கதிரேசன் உதவி ஆய்வாளர் தலைமையிலும், குட்கா புகையிலை தடுப்பிற்காக பாஸ்கரன், உதவி ஆய்வாளர் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 01.01.2024ம் தேதி முதல் 12.06.2024 தேதி வரை, 1371.299 கிலோகிராம் குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 202 எதிரிகளை (ஆண்கள்-185, பெண்கள்-17) கைது செய்து, அவர்களிடமிருந்து எட்டு இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு மொத்தம் 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வழக்குகளில் தொடர்புடைய 192 கடைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் உதவியுடன் சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் ரூ.33,00,000/- அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், மேற்படி நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.