Skip to main content

ஆசிரியர்கள் போராட்டம்; 136 பேர் கைது

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
136 teachers who went to besiege the education department office were arrested

கடலூரில் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 136 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டாததால் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். 

பின்னர் இயக்கத்  தலைவர் கனகராஜன் தலைமையிலும், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவானந்தம், துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் ஊர்வலமாகச் செல்லத் தயாரானார்கள். அப்போது அங்கு சென்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீஸார் அவர்களை வழி மறித்து 136 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்