டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் சோப்ரா, 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ள நிலையில், இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 66 வது இடத்தில் இருந்து 47 ஆவது இடத்திற்கு முன்னோக்கி நகர்த்துள்ளது.
ஹரியானவை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். தங்கம் வென்ற அவருக்கு பிரதமர் மோடி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நீரஜ் சோப்ராவிற்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் கிரேடு -1 அரசுப்பணியும் வழங்கப்படும் என ஹரியானா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் முதல் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ள நீரஜ் சோப்ராவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தடகளத்தில் 120 ஆண்டுகால இந்தியாவின் கனவை தனது வெற்றி மூலம் நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளார். 100 கோடி இதயங்களை தனது வெற்றி மூலம் நீரஜ் சோப்ரா வென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.