ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி அதற்கென்று தனியாக போலீசாரை நியமித்துள்ளார். அதேபோல் டாஸ்மாக் கடைகள், பார்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 12 போலீசார் அதிரடியாக மலைப்பகுதியான தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பிறப்பித்திருந்தார். அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிரேடு–1 ஜெயசங்கர மூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் கிரேடு–1 பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகர் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் ராஜேந்திரன், செந்தில், ஆசனூர் மதுவிலக்கு சாதிக் பாட்சா, தலைமைக் காவலர்கள் கடத்தூர் தினேஷ் குமார், கடம்பூர் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகக் காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.