கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.