கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருடு போனது. இச்சம்பவம் குறித்து பெங்களூரு ஜே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வினய்விஜய் (25), இலியாஸ் (23) இருவரையும் ஜே.பி.நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அவர்கள் திருடிய இரு சக்கர வாகனங்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்துள்ளோம் என விசாரணையில் தெரிவித்தனர். திருடு போன இருசக்கர வாகனங்கள் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி, பகுதியில் வசிக்கும் மாரி, மத்தூர் பகுதி சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் இருப்பது போலிசாருக்கு தெரிய வந்தது.
கர்நாடக போலீசார் எஸ்.ஐ சைனய்யா தலைமையில் தனிப்படையினர் பேர்ணாம்பட்டு போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையைத் துவங்கியது. கோட்டைசேரி பகுதியைச் சேர்ந்த மாரி, மத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் திருடு போன 12 சக்கர வாகனங்களை கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கர்நாடக போலீசார் பெங்களூருக்குக் கொண்டு சென்றனர். அவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.