தென்காசியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தையான கனகராஜ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிப்போனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். சென்னை, திருவள்ளூரில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழக அரசு, பிரச்சனையின் தன்மையை அறிந்தே தேர்வு முடிவை வெளியிட்டிருக்கும். தேர்வு நடத்தும் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து தெரிவித்துள்ள கருத்தில், “மாணவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.