வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா கந்திலி அடுத்த சொக்கனாம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் முனியப்பன். 35 வயதான முனியப்பன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 108 அவசர வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆகஸ்ட் 11 ந்தேதி இரவு கந்திலி பகுதியிலிருந்து நோயாளியை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும்போது நுழைவாயில் முன் நின்றுயிருந்த சில இளைஞர்கள் சேர்ந்து முனியனை வண்டியில் இருந்து கீழே இழுத்துப்போட்டு அடித்து உதைத்து ஒரு ஆட்டோவில் தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றுள்ளார்கள். இதனைப்பார்த்து அங்கிருந்தவர்கள் பார்த்து மிரண்டுள்ளனர்.
முனியப்பனுக்கும், சொக்கனாம்பட்டி பகுதியை சேர்ந்த மணி, ரமேஷ்க்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கூலி படையை ஏவிவிட்டு திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் கார்த்திக் மற்றும் ரமேஷ் மகன் மணி ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து முனியப்பனை கடுமையாக தாக்கி ஆட்டோவில் தூக்கிச்சென்று கிடங்கில் கட்டி வைத்து சித்ரவதை செய்து சரமாரியாக தாக்கினர்.
இந்த தகவல் அறிந்து சென்ற 108 வாகன ஓட்டுநர் கணேசன் முனியப்பனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் கூலிப்படையை சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் வலை வீசி தேடி வருகின்றனர்.