ஈரோடு அடுத்த சின்னசடையம் பாளையம் மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதனை அடுத்து மண்டல பூஜை தொடங்கியது. பூஜை நிறைவடைய உள்ளதால் கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில் ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்து வரக் கடந்த 6-ந் தேதி இரவு ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றனர். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் கோவில் முன் போடப்பட்டிருந்த தகர ஷீட் கூரை அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் நள்ளிரவில் தகர ஷீட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 10 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் யாராவது மர்ம நபர்கள் தீவைத்து எரித்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி கேமரா காட்சியில் எதுவும் பதிவாகவில்லை. இதனை அடுத்து தடய அறிவியல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது இடி -மின்னல் தாக்கி மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.