திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 10மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020 ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மூடப்பட்டது. இதனால் என்.ஜ.டி. கல்லூரியில் நேரடி வகுப்பு மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்றுவந்தது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கடந்த நவம்பர் மாதம் முதலே கல்லூரிக்கு வரத் தொடங்கினார்கள். இந்த என்.ஐ.டி. கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 1200 பேர் மற்றும் எம்டெக், பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உட்பட சுமார் 2500 மாணவ, மாணவிகள் என்.ஐ.டி. கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
300 பேராசிரியர்கள் உள்பட சுமார் 500 ஊழியர்கள் என்.ஐ.டி. கல்லூரியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.டி. கல்லூரியில் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. அதற்காக முன்கூட்டியே வாரம் 500 பேர் விதம் கல்லூரிக்கு மாணவர்கள் வரவழைக்கபடுகின்றனர். அப்படி வந்த 577 மாணவர்களுக்குக் கடந்த 30 மற்றும் 31ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், தெலுங்கானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமா என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது மரபணு மாதிரிகள் சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இன்று (4ம் தேதி) கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது என்.ஐ.டி. மாணவர்கள் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் என்.ஐ.டி. கல்லூரியில் தற்பொழுது கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஊழியர்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.