தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்குள் வைக்கப்படும் பணி தீவிரமடைந்துள்ளது.
உள்ளே வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குத் துணை ராணுவப்படை, அதிரடி படை, காவலர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. வேட்பாளர்களுக்கான முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை சீல் செய்யப்படும். அறைகளை சீலிட்டபின் அறைக்கதவுக்கு அருகே கம்பி வேலி அமைக்கப்படும். பாதுகாப்பு வீரர்களுடன் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவையின் 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 68.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 77.28 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் கோவை தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லுர், கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 தொகுதிகளின் வாக்கு இயந்திரங்களும் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து சீலிடப்பட்டன.