சென்னை சேத்துப்பட்டில் மலையாளி கிளப் நிகழ்ச்சிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ''அண்மையில் கொண்டாடிய ஓணம் திருநாளுக்கு மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துக்களை சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் மூலம் நான் மலையாளத்தில் பேசி இருக்கிறேன். நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு திராவிடம் என்ற சொல் இன்று எரிச்சலாக இருக்கிறது. கேரளா அரசின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல்பட்டு வருகிறது. சார்பு நிலை இல்லாத மதச்சார்பற்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் பங்காற்றி வருகிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். அந்த வகையில் மிகவும் சிறப்பான அனுபவமிக்க ஊடகவியலாளர்களால் செயல்படும் அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பு பெற்றதற்கு பெருமை அடைகிறேன்'' என்றார்.