
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓபிஎஸ் மூன்று வேட்பாளர்களை அறிவித்தார். அதேசமயம் புலிகேசி நகரில் இபிஎஸ் தனது வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் தரப்பும் அதே தொகுதியில் எடப்பாடிக்கு எதிராக தனது வேட்பாளரை களமிறக்கினார். தொடர்ந்து கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்த்ராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் கே.குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், புலிகேசி நகரில் வேட்புமனுத் தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டதை நிராகரிக்க வேண்டும் என அதிமுக எடப்பாடி தரப்பு புகாரளித்தது. கர்நாடகாவின் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மனு ஏற்கப்பட்டதை நிராகரிக்க வேண்டும் என காந்தி நகர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் கர்நாடகா அதிமுக மாநிலச் செயலாளர் எஸ்.டி.குமார் புகார் அளித்தார். கட்சியின் அங்கீகாரம் இல்லாத வேட்பாளர்கள் அதிமுக பெயரில் வேட்புமனுத் தாக்கல் செய்தது சட்ட விரோதம். எனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் தரப்பினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதன் பின் தங்கள் வேட்பாளர்கள் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

இந்நிலையில் ஓபிஎஸ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த குமார், ஓபிஎஸ் வேட்பாளராகவும் அதிமுக வேட்பாளராகவுமே அங்கீகரிக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கர்நாடக அதிமுக செயலாளரான குமார் தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் வழங்கப்பட்டது.
புகாரில், அதிமுக கட்சி எங்களுடையது. அதில் ஓபிஎஸ் தரப்பினர் பொய்யான ஆவணங்களைக் கொண்டு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை தேர்தல் ஆணையம், காந்தி நகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆணையருக்கு நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், காவல்நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1860 எனும் பிரிவின் கீழும் 179G பிரிவின் கீழும் ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.