Skip to main content

“அதிமுக கொடி, பெயர், சின்னங்களை பயன்படுத்தமாட்டேன்” - ஓ.பி.எஸ்.

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Will not use ADMK flag, name, symbols O.P.S

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன்,  “மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், “வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றால் பதில் மனுவை தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் அல்லது வழக்கை ஒத்தி வைப்பதாக இருந்தால் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, “தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தமாட்டோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 “இ.பி.எஸ். மீது சட்ட நடவடிக்கை..” - ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
“Legal action on E.P.S. ..” - R.S. Bharti

கடலூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்போது தமிழகத்தில் போதைப் பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார். திமுகவின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்தில் அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்திய அளவில் பாராட்டுகின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 

அதிமுக ஆட்சியின் போது, குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை கண்டித்தெல்லாம் அவர் போராட்டம் நடத்தவில்லை. போதைப் பொருளை இந்தியா முழுவதும் சப்ளை செய்வது பாஜகவினர்தான். அதிமுக ஆட்சியில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்டவர்கள் மீது குட்கா வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. இவர்கள் மீது அப்போது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒருவர் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் எந்த குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது போதைப் பொருள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து தான் உலகம் முழுவதும் ஐடி துறையில் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இது 2019ல் கூடிய கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டிற்கு மோடி முனிசிபாலிட்டி எலக்சனுக்கு வருவது போல் வந்து செல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர் ஒரு அரசியல்வாதி. என்.எல்.சி., அணு உலை குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு திமுக நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

Next Story

ஓ. பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு பரபரப்பு புகார்!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Edappadi Palaniswami's sensational complaint against O. PanneerSelvam

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

 Edappadi Palaniswami's sensational complaint against O. PanneerSelvam

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்துள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதத்திற்காக மார்ச் 12 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.