வானூர் (தனி) தொகுதியில், திமுக கூட்டணியில் விசிக சார்பில் அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சக்கரபாணி மீண்டும் களம் காண்கிறார். திமுக 2001, 2006, 2011, 2016 என கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, இதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார், திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் நின்று, இந்த சட்டமன்றத் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற பாமக வேட்பாளரைவிட 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே விசிக தலைமை வன்னியரசுவை இந்தத் தொகுதியில் களமிறக்கியதற்கு முக்கியக் காரணம்.
அதே நேரத்தில், இது அதிமுகவிற்கும், பாமகவிற்கும் செல்வாக்குள்ள தொகுதியும்கூட. மேலும், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் சக்கரபாணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி அமைச்சரின் ஆதரவுடன் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று தீவிர களப்பணியில் உள்ளார் சக்கரபாணி.
திமுக கூட்டணியில் வெற்றிபெற விசிக வேட்பாளர் வன்னியரசு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களுடன் தீவிரமாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுவருகிறார். இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களோடு தேமுதிக சார்பில் பி.எம்.கணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் லட்சுமி ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இதில், அமமுகவின் கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் கணபதி கணிசமான அளவு வாக்குகளைப் பிரிப்பார், அது விசிக வேட்பாளருக்கு சாதகமாக அமையும் என்ற நிலையும் உள்ளது. இதனால் விசிக வேட்பாளர் வன்னியரசு களத்தில் வேகம் காட்டிவருகிறார்.