புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "அதானி குழுமத்தின் பொருளாதார ஊழல்களுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மோடி மவுனம் காப்பது ஏன்? இதை விசாரிக்க மத்திய அரசு நிறுவனங்களும் தயாராக இல்லை, மோடியும் தயாராக இல்லை. வருமான வரித்துறையும் விசாரிக்க மறுத்துள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், பங்கு இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதை நீதிமன்றம் விசாரித்து தான் உரிய நீதியை தர வேண்டும்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பற்றி குறை கூறும் மோடி காங்கிரஸ் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அதானி நிறுவனம் பினாமி பெயரில் நிறுவனங்கள் நடத்தியுள்ளதாக ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுக்கு உதாரணமாக அதானிக்கும் புதுச்சேரிக்கும் தொடர்பு உள்ளது. காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகம் ஏலத்திற்கு வந்தபோது அதை வாங்க அதானி முயற்சி செய்தார். அதை பினாமி நிறுவனம் மூலம் எடுக்க திட்டமிட்டு ஓங்காரா நிறுவனத்தின் சக்திவேல் என்பவர் மூலம் ஏலம் எடுத்து பின்னர் அதானி குழுமத்தினரை இயக்குநராக போட்டுள்ளார்கள். அதானிக்கு அடிபணிந்த புதுச்சேரி அரசு தனியார் துறைமுகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதானி பினாமி பெயரில் நிறுவனங்கள் நடத்துவதும் அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி வழங்கியது என்று முதலமைச்சர் ரங்கசாமியும், பா.ஜ.கவும் தம்பட்டம் அடித்து வருகின்றனர். உண்மையில் மத்திய அரசு நிதி வழங்கியதா என ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? நான் எம்.பி.யாக இருந்தபோது புதுச்சேரிக்கு 13 புதிய ரயில்கள், காரைக்காலுக்கு 6 புதிய ரயில்கள், கேந்திரிய வித்யாலயா, என்.ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டு வந்தேன். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு ஒரு ரயிலை கூட புதிதாக கொண்டு வரவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை பா.ஜ.க கட்டாயத் திருமணம் செய்துள்ளது. இது விரைவில் விவாகரத்து ஆகும்" என்றார்.