நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் 1 ஒரு மக்களவை தொகுதி உட்பட 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டணி நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு கை கூடி விடக்கூடாது என்பதற்கான முடிவு இது. இந்த அரசியலை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம். எந்த கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே என்னுடைய சகோதரர்கள் தான். தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்” எனத் தெரிவித்துள்ளார்.