அம்மா மறைந்த இந்நன்னாளில் என்று கூறிய வார்த்தைகளை ஈபிஎஸ் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்தபோது இது குறித்துப் பேசிய அவர், “ஓபிஎஸ் கூட்டப்போவது பொதுக்குழு அல்ல கண்காட்சிதான். இன்னும் அவரால் மாவட்டச் செயலாளர்களை வைத்து நிரூபிக்க முடியவில்லை. ஒரே ஒரு பேச்சாளர்தான் இருந்தார். அவரும் போய்விட்டார். அவர் கூட திமுகவிற்கு போய்விட்டார். ஓபிஎஸ் திமுகவுடன் வைத்திருந்த உறவை கோவை செல்வராஜ் சென்று உறுதிப்படுத்திவிட்டார்.
ஓபிஎஸ் தனியாக கட்சி நடத்தினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதிமுக என்பது எடப்பாடி தலைமையில் ஒரே இயக்கம்தான். இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெறும். தலைமை கழகத்தையும் நாங்கள்தான் வைத்துள்ளோம். வெற்றி பெறுவதற்கும் தயாராக உள்ளோம்.
அம்மா மறைந்த நன்னாளில் என ஈபிஎஸ் சொன்னதற்கு சிலர் கூறிய கருத்துகளைப் பார்த்தேன். அனைத்து கூட்டங்களிலும் உறுதிமொழி எடுப்பது வழக்கம். பழனிசாமிக்கு சில தலைவர்கள் போல் பார்த்துப் படிக்கும் பழக்கம் இல்லை. அவர் குறைந்த குறிப்புகளை வைத்து தான் பேசுவார். அன்று உறுதிமொழி பத்திரத்தில் சில தவறுகள் நடந்ததால் அந்த சூழல் ஏற்பட்டது.
ஆளுமைத் திறன் கொண்டவர் நல்ல நாளில் மறைந்துள்ளார் என நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் 5ம் தேதி பிரதோஷம். பிரதோஷத்தைக் கூட நன்னாள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். அந்த நோக்கத்தோடுதான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். பிரதோஷ நாள் மட்டுமல்ல டெல்லியில் இருக்கும் மத்திய அரசு எங்களை அங்கீகரித்து டெல்லிக்கு அழைத்ததைக் கூட எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கலாம். தவறான எண்ணத்துடன் அந்த வார்த்தைகளைப் படிக்கவில்லை” என்றார்.