டெல்லியின் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பா.ஜ.க.வைப் பற்றி பிரச்சார மேடைகளில் அதிகம் பேசி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், கடந்த 11 மாதங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியைப் பற்றி ஒரு வார்த்தைகூட பதிவிடாமல் இருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ட்விட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். தொடர்ந்து அரசியல் கருத்துகளை தன் ட்விட்டர் கணக்கில் பதிவிடும் அவர், மோடி பற்றி கடந்த வருடம் மார்ச் 9ஆம் தேதி கடைசியாக பதிவிட்டிருந்தார். அதற்கடுத்த 11 மாதங்களில் ஒருமுறை கூட அவர் மோடி என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. இத்தனைக்கும் 2016ஆம் ஆண்டு 124 முறையும், 2017ஆம் ஆண்டு 33 முறையும் மோடி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஒருமுறைகூட மோடியின் கணக்கை தனது பதிவுகளில் டேக் செய்யவும் இல்லை. 2016ஆம் ஆண்டு 8 முறை மட்டுமே டேக் செய்திருக்கிறார்.
மத்திய அரசு குறித்து கருத்து தெரிவிப்பதில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகியிருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை குடியரசுத் தலைவர் தகுதிநீக்கம் செய்தது, டெல்லி சட்டமன்றத் தேர்தல் மாபெரும் வெற்றிபெற்ற பின் பஞ்சாப், கோவா சட்டமன்ற மற்றும் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் கடும் பின்னடைவு ஆகியற்றை அவர்கள் காரணங்களாக முன்வைக்கின்றனர்.
டெல்லியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்திய மோடி, சர்வாதிகாரி மோடி, ராணுவத்துக்கு எதிரான மோடி என்றெல்லாம் கடித்துத் துப்பிய அரவிந்த் கேஜ்ரிவால், இன்று மவுனம் காப்பதை அவரது அரசியல் வியூகம் என்கின்றனர் ஆம் ஆத்மியினர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், ‘இது எங்கள் தலைவர் எடுத்த தெளிவான முடிவு. மோடியைத் தாக்குவதை விட்டுவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்தவேண்டும் என எங்களை வலியுறுத்தியிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.