![Sellur K. Raju](http://image.nakkheeran.in/cdn/farfuture/favLQhwqcdFCtEKT6ViObUtxUmZaeg5JCgDWnPeZNmM/1597071524/sites/default/files/inline-images/Sellur%20K.%20Raju%20600_0.jpg)
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் 90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். கடந்தாண்டு மழை நன்றாகப் பெய்து மதுரையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றவர் கு.க.செல்வம் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.விற்குச் சென்றது அவரது விருப்பம். எங்களது கருத்தை ஏற்று அ.தி.மு.க.விற்கு தி.மு.க.வினர் யார் வந்தாலும் இரு கைகூப்பி வரவேற்போம் எனத் தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.விற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா பற்றி எங்களுக்குக் கவலையில்லை. சசிகலா வெளியே வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய அளவில் வலுப்பெரும். அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நன்றாகச் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இருபெரும் தலைவர்கள், இ.பி.எஸ்.-ஒ.பி.எஸ். தலைமையில் கட்சி செயல்படும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
எங்கள் சட்டமன்ற உருப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர் எனத் தெரிவித்தார். சொல்லிவிட்டு, "அருகிலிருந்தவர்களிடம் என்னப்பா நான் சொன்னது சரிதானே" என்று கேட்டுக் கொண்டார். அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பத்த வச்சுட்டு சரியானு கேள்வி வேறு... இனி எரிய தொடங்கிரும்... என்று கமெண்ட் அடிக்க எல்லோரும் சிரித்தனர்.