Skip to main content

யாருக்கெல்லாம் ரூ.1000? முதலமைச்சர் விளக்கம்!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

Who has Rs.1000? Chief Minister explanation!

 

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகள், தகுதி வாய்ந்த மகளிரை எப்படி தேர்வு செய்வீர்கள், யாரெல்லாம் தகுதி வாய்ந்த மகளிர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

 

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், “இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. 'பகிர்தல் அறம்' என்றும்; 'பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத் திட்டங்களின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும்.

 

'அனைவருக்கும் வீடு' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் கனவு இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள். 'அனைவருக்கும் நிலம்' என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்' என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.

 

அந்தவகையில், இந்த 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.

 

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக  அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.  இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

Next Story

உயிரிழப்பு அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 increase in casualties; Kallakurichi rushing ministers

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்று கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35),  மற்றும் மேலும் இருவர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.