கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையே நீடித்து வரும் நிலையில், அண்மையில் பாஜக தலைவர் ஜே.பி.நாட்டா மதுரை எய்ம்ஸ்ஸின் 90% பணிகள் முடிந்துவிட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் 'எங்கே எங்கள் மதுரை எய்ம்ஸ்?' எனக் கேட்டு நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மதுரையின் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்னென்னமோ காரணங்களைச் சொல்கிறார்கள். உண்மையான காரணம் தமிழக மக்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில் மனமற்ற; விருப்பமற்ற அரசாக பாஜக இருக்கிறது.
இப்பொழுது நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் நிதித்துறையின் விவாதத்தின் போது கேள்வியெழுப்பியும் எழுத்துப்பூர்வமான கேள்வியெழுப்பியும், அதற்கு அவர்கள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையின் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என்று சொல்கிறார்கள். நமது கேள்வி எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதல்ல, எப்பொழுது கட்டடப் பணியைத் துவக்குவீர்கள் என்பதுதான். அதற்கு தற்பொழுது வரை பதில் சொல்ல மறுக்கிறார்கள்'' என்றார்.