
பல்வேறு பரபரப்புகளை கடந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''முதல்வரின் இரண்டாண்டு கால சிறந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ். பொதுமக்கள், உழைக்கின்ற மக்கள், பெண்கள் இவர்களெல்லாம் இந்த ஆட்சியினுடைய செயல்பாடு திருத்தி அளித்திருக்கிறது என்பதற்கான சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். குடிநீர் அவர்களுக்கு கிடைக்கிறது, தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது, பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள், மழைநீர்; கழிவுநீர் அகற்றம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்த அடிப்படை காரணங்கள் தான் இந்த வெற்றிக்கு ஒரு மூலகாரணம். அதேபோல் ராகுல் காந்தியினுடைய இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பமும் அரசியல் சார்ந்த குடும்பம். நூறாண்டு காலமாக ஈரோடுக்கும் தமிழகத்திற்கும் அரும்பணியாற்றிய குடும்பம். இவைகளெல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியை கொடுத்தது. குறிப்பாக தமிழக முதல்வரின் அயராத உழைப்பு; இந்த தேர்தலில் அவர் காட்டிய மிகப்பெரிய ஆர்வம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து இந்த வெற்றியை எங்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறார்.
பாஜகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் ஒரு தெளிவு இல்லாமல் இருந்தார்கள். எங்கள் கூட்டணிக்கு ஒரு தெளிவு இருந்தது. எங்கள் கொள்கைகளை நாங்கள் அழுத்தமாகச் சொன்னோம். ஆனால், அவர்களுக்கு தெளிவில்லை. சலனத்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடியின் படங்களை அதிமுக பயன்படுத்தினார்கள். சில இடங்களில் பாஜகவின் கொடியைக் கூட அவர்கள் பயன்படுத்தத் தயாராக இல்லை. எனவே, இவையெல்லாம் எங்களுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். அயராது உழைக்கக் கூடியவர்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வாக்குப்பதிவு முடிந்த நாளன்று மாலையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தேர்தல் சுமூகமாக முடிந்தது. தேர்தல் ஆணையம் மிக நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள். எந்த தவறும் ஏற்படவில்லை என்பதை தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் தோற்றுவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்கிறார்'' என்றார்.