திருச்சியில் இன்று (08/11/2022) காலை 11.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர்.
தமிழகம் வரும் பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா?
பாரதப் பிரதமர் தமிழகம் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் எங்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.
‘அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் நானும் சேரத் தயாராக இருக்கிறேன்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இது நல்ல கருத்துதான். வரவேற்கிறோம்.
அ.தி.மு.க., தி.மு.க. அண்ணன், தம்பி கட்சி; பா.ஜ.க.வை வர விடக் கூடாது என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அண்ணன், தம்பி இயக்கம் தான். ஆனால், மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய பாதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். உருவாக்கிய பாதை. அந்த பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க. அவர்களது பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் இன்றைய நிலை.
அ.தி.மு.க.வின் ஒற்றுமையை பா.ஜ.க. பிரிக்கப் பார்க்கிறது என்கிறார்களே?
அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.