அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், தனிக்கட்சி துவங்கியவர்கள் அனைவரும் ஒன்று சேருவோம். இந்த ஒற்றுமைக்கு அவர்கள் ஒத்து வரவில்லை என்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
வைத்திலிங்கம் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். ஓபிஎஸ் கருத்து என்பது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது. அவரது கருத்தை தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கி விட்டு நாங்கள் ஒன்று சேருவோம். நாங்கள் விரும்புவது கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதில் பாஜக தலையிடுவதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்றாக இணைவோம்.
எடப்பாடி பழனிசாமி மட்டும் இப்பொழுது சொல்லிக்கொண்டு இருக்கிறார். சில காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இணைவோம். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், தனிக்கட்சி துவங்கியவர்கள் அனைவரும் ஒன்று சேருவோம். இந்த ஒற்றுமைக்கு அவர்கள் ஒத்து வரவில்லை என்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தான் உண்மை.
கோவை செல்வராஜிற்கு தலைமைக் கழகத்தில் பதவி கொடுக்க இருந்தோம். அவரை மாவட்டச் செயலாளராகப் போட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அவரை செய்தி தொடர்பாளராகப் போட்டு சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் மாவட்டத்தைக் கவனிக்க முடியவில்லை. அதனால் மாவட்டங்களைப் பிரித்து 4 மாவட்டச் செயலாளர்களைப் போட்டுள்ளோம். அவர் அதைப் பார்த்து நான் விலகுகிறேன் எனச் சொல்லுகிறார். எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. நிச்சயமாகப் பேசுவோம் அவர் எங்களை விட்டுப் போகமாட்டார் என்று தான் நினைக்கின்றேன்” எனக் கூறினார்.