We will commit to form a Dravidian model govt again Minister Udayanidhi

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6வது நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

Advertisment

இந்த அமைதிப் பேரணி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் தொடங்க உள்ளது. அதன் பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் பேரணி நிறைவடைய உள்ளது. அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கலைஞர் குறித்து அமைச்சர் உதயநிதி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் கலைஞரின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞரின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்தியாவை தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞரின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைககளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர். அவர் வழியில் உழைத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment