
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தொழிலாளர்களின் இடம் பெயர்வு குறித்தான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
கருத்தரங்கு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் வழியாக, புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பது பற்றியும் அவர்களைப் பாதுகாப்பது பற்றியும் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.
பல்வேறு வகையான சட்டங்கள் உள்ளது. பெரும்பாலான சட்டங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்புள்ள சட்டங்கள். இன்று அவர்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கமும் முதல்வரும் பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளார்கள். இருந்தாலும் யார் வெளிநாட்டிற்கு வேலைக்கு போகிறார்கள். யார் தமிழகத்திற்கு வருகிறார்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு வேலைக்கு செல்லக்கூடியவர்கள் யார், அங்கு இருக்கிறவர்களுக்கு அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் உரிமை இருக்கிறதா இதைப்பற்றிய தரவுகள் பதிவுகள் எதுவும் தேசிய அளவில் கிடையாது. இதை உறுதி செய்ய வேண்டும்.
வட இந்திய தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை நாம் விரும்புவதால் தான் அவர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். நமது தொழிற்சாலைகள் நடக்க வேண்டும். நமது வேலைகள் நடக்க ஆட்கள் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். நாம் அழைத்து வரும் விருந்தினர்கள் அவர்கள் எனும் உணர்வோடு அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு தமிழகத்தில் இருக்கிறது. மக்களும் அதனை உணர்ந்து கொண்டு அவர்களை வரவேற்று, வருபவர்களை வாழவைக்கக்கூடிய தமிழ்நாட்டில் நாம் அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.