உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த நிலையில் பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களின் சார்பில் கூட்டுத்தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, வீட்டு வசதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதாவது, “நமது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான சக்திகள் இங்கு உள்ளன. அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. மனிதர்களிடத்தில் அன்பு, நம்பிக்கையுடன் வாழும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். மாநில வளர்ச்சி மட்டுமல்லாமல் மக்களின் வளர்ச்சியையும் நாம் வலுப்படுத்த வேண்டும். இறைவன் அனைவருக்கும் நல்ல புத்தியை வழங்கி மனிதர்களாக வாழும் குணங்களை வழங்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.
பக்ரீத் பண்டிகை தியாகத்தின் அடையாளம். மனிதர்களாகிய நமக்கு நல்ல குணங்களை வழங்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் திருநாளான இன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறினார்.