விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நம்மிடம் “சும்மாவே சொல்லிக்கிட்டிருக்காங்க.. தமிழகத்தில் ஆளும் கட்சியா இருக்கிற அ.தி.மு.க.வை, மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்டிப் படைக்குதுன்னு.. அது ரொம்பவும் சரிதான்னு சொல்லுற மாதிரி.. இந்த சுதாகர் ரெட்டி (பா.ஜ.க. சட்டமன்றத் தொகுதி மேலிட தேர்தல் இணை பொறுப்பாளர்) ‘சகோதரி கவுதமி இந்த ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’னு ஆலோசனைக் கூட்டத்துல பேசிருக்காரு. தமிழகத்துல யார் தலைமையில் தேர்தல் கூட்டணின்னு அ.தி.மு.க. தொண்டர்கள் சந்தேகப்படற மாதிரி இதெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. கூட்டணி முடிவாகி, தொகுதி உடன்பாடு குறித்தப் பேச்சுவார்த்தை நடந்து, எந்த தொகுதி எந்தக் கட்சிக்குன்னு அறிவிப்பு வெளியாகுறதுக்கு முன்னாலயே, சுதாகர் ரெட்டி தன்னிச்சையா ராஜபாளையம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கவுதமிதான்னு பேசியது சரியில்ல..” என்று விசனப்பட்டார்.
இதே கேள்வியைச் செய்தியாளர்களும் சுதாகர் ரெட்டியிடம் கேட்க “ஒரு தேசிய கட்சியில் ஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கும், வேட்பாளர் தேர்வை நடத்துவதற்கும் எங்களது பாராளுமன்ற வாரியத்துக்கு மிக உயர்ந்த அதிகாரம் உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்துவோம். விரைவில் எங்களது வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.” என்று பதிலளித்து சமாளித்தார்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. பொறுப்பாளரான நடிகை கவுதமி ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது ‘கேள்வி கேட்பேன்; பதில் சொல்லவில்லை என்றால் என்னுடைய இன்னொரு பக்கத்தைப் பார்ப்பீர்கள்!’ என, பா.ஜ.க. தொண்டர்களுக்கு செல்லமாக மிரட்டல் விடுத்தார். கவுதமியின் காரசார உரை இதோ - “என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தத் தேர்தலில் நம்மள நாம தயார் பண்ணிக்கிறது, நம்முடைய பயணத்தில் முதல்படி மட்டும்தான். இதற்கப்புறம் நம்முடைய பயணம், எவ்வளவோ இருக்கு. இன்னும் எத்தனையோ தேர்தல்கள்.. எத்தனையோ போட்டிகள்.. இன்னும் எவ்வளவோ வளர வேண்டியிருக்கு. மத்தியில் இருந்து எத்தனையோ தலைவர்கள் வந்து நம்மை உருவாக்க வேண்டியிருக்கு. அதற்கான தயாரிப்புதான் இந்த தேர்தலுக்கான இந்த வேலைகளை நாம பண்ணிக்கிட்டிருக்கோம். இந்த விஷயம் நான் திரும்பத் திரும்ப.. அடுத்த ஒரு மாசத்துக்குள்ள நான் நெறைய தடவை சொல்லப்போறேன். அப்பப்ப நின்னு நான் வந்து உங்கள கேள்வி கேட்கப்போறேன். அன்னைக்கு நான் என்ன சொன்னேன்னு உங்ககிட்ட கேட்கப்போறேன். அப்ப நீங்க பதில் சொல்லலைன்னா.. இந்த சிரிப்புக்கு இன்னொரு பக்கத்தை நீங்க பார்க்கப்போறீங்க. சரிங்களா? ஏன்னா.. மறந்துடாதீங்க.” என்று பேசி முடித்தார்.
‘ஆமாம் கவுதமி.. இப்ப நீங்க என்ன பேசினீங்க? அடுத்து என்ன கேட்கப் போறீங்க?’ என மண்டை காய்ந்த தாமரைக் கட்சியினரின் மைன்ட் வாய்ஸை, நிச்சயமாக கவுதமியின் இன்னொரு பக்கம் ‘கேட்ச்’ பண்ணியிருக்காது.