விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுக மந்திரியும் மா.செ.வுமான சண்முகம் மாவட்ட அளவில் கட்சி பதவிகள் கொடுப்பதில் தன் கட்டுப்பாட்டில் இப்போது கொண்டு வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்ட வேண்டும், அப்போதுதான் கட்சித் தலைமையில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாக முடியும் என்பதை நிரூபிக்க தயாராகிவிட்டாராம் மந்திரி சண்முகம்.
அதன் எதிரொலியாக அவரது வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய அளவில் கட்சியினர் பதவிகளை சிலரிடமிருந்து பறித்துள்ளார். பலருக்கு புதிய பதவிகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து புது முகங்களுக்கு ஒ.செ. பதவியை கொடுத்து தன் விசுவாசிகளை மிக வேகமாக வளர்த்து வருகிறார்.
ஏற்கனவே அமைச்சர் சண்முகத்திடம் இருந்த மா.செ. பதவியை பறித்து விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் அவர்களிடம் ஜெ. இருக்கும்போது வழங்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ் மூலம் கட்சிக்கு உள்ளே நுழைந்த டாக்டர் லட்சுமணன் மா.செ. பதவி, ராஜ்யசபா எம்பி பதவி என பதவிகள் பெற்று அதிரடி அரசியல் செய்தார். அப்போது மந்திரி சண்முகத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் லட்சுமணனை நோக்கி படையெடுத்தனர்.
இந்த நிலையில் ஜெ. மறைவையடுத்து சசிகலா சிறைக்கு சென்றார். அந்த நேரத்தில் லட்சுமணனிடமிருந்து மா.செ பதவியை மீண்டும் மந்திரி சண்முகத்திடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து லட்சுமணனை நோக்கி ஓடியவர்கள் எல்லாம் மீண்டும் சண்முகத்தை நாடி ஓடி வந்தனர். இதனால் அமைச்சர் சண்முகம் தற்போது மாவட்ட அளவில் கட்சிப் பதவிகளில் தன் விருப்பப்படி மாற்றம் செய்துள்ளார். இதனால் கட்சிக்குள் முணுமுணுப்புகள் இருந்தாலும்கூட கட்சி ஆட்சியில் இருப்பதால் அமைச்சரிடம் விசுவாசமாக இருப்பது போல பலர் காட்டி கொள்கிறார்கள்.
மாவட்ட அரசியலிலும் சரி, மாநில அரசியலும் சரி அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் நெளிவு சுளிவுகளை மிகச்சரியாக சொல்லிக்கொடுத்து அவரை வழிநடத்தி வருகிறார் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். விழுப்புரம் தெற்கு மா.செ.வாக உள்ளவர் எம்எல்ஏ குமரகுரு. இவர் முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளவர். ஆனால் மந்திரி சண்முகம் ஓபிஎஸ் - இபிஎஸ் என யாருடைய விசுவாசியும் இல்லாமல் தனித்தன்மையோடு தன் அரசியலை நடத்திக் காட்டி வருகிறார்.
அதை மேலும் பலப்படுத்த தனது ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளை கொடுத்து அதன்மூலம் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மாவட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று கட்சி மேலிடத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறாராம் மந்திரி சண்முகம்.
ஏற்கனவே திமுகவில் இதுபோன்று ஒன்றிய அளவில் கட்சி பதவிகள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அளவிற்கு ஈடுகொடுத்து கட்சிப் பணி செய்வதில் திமுகவினர் மத்தியில் இன்னும் கூடுதல் வேகம் தேவை என்கிறார்கள் திமுகவினர். மாவட்டத்தில் மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். செஞ்சி மஸ்தான், எக்ஸ் மந்திரி பொன்முடி, எக்ஸ் எம்எல்ஏ அங்கயற்கண்ணி என மூவர் இருந்தும் திமுக தரப்பில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். வரும் தேர்தல்களில் மாவட்டத்தில் யார் கை ஓங்கும் திமுகவா? அதிமுகவா? என்ற பரபரப்பான டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.