அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதற்காக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். எனினும் கட்சியின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தான் இருக்கிறது.
இந்நிலையில், எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய ஒரு வீடியோ பெரும் வைரலானது. அதில் அவர், “கட்சி நன்றாக இருக்கும் போதே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். இருந்தும் கட்சி உடையக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை வந்தது” என ஓ.பி.எஸ். மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜெ.சி.டி. பிரபாகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தங்கமணி பேச்சுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. காரணம் இந்தக் கட்சியில் அவர்கள் சார்பில் பொய் சொல்வதற்கு ஜெயக்குமாரைமட்டும் தான் வைத்திருந்தார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது அதில் தங்கமணியையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. தர்மயுத்தம் துவங்கிய காலத்தில் ஓ.பி.எஸ். பின் மக்களும், தொண்டர்களும் திரண்டு நின்றதை நாடே பார்த்தது.
அப்போது ஓ.பி.எஸ். ஒரு நாள் எங்களை அழைத்து, ‘நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் கட்சியும், ஆட்சியும் வீனாகிவிடும். என்னால் இந்தக் கட்சி கெட்டது, பிளவுபட்டது, என்னால் எல்லாம் முடிந்தது எனும் நிலைமை என்றும் வரக்கூடாது. நான் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன் அதனால், கட்சியில் ஒற்றுமையை விரும்புகிறேன். அதனால், தர்மயுத்தத்தில் நாம் வைத்திருக்கும் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் இணைவோமா’ என்று எங்களிடம் கேட்டுவிட்டு அந்த தர்ம யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்த தர்மயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, பல்வேறு நிலையில் பலர் முயற்சி எடுத்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக ஓ.பி.எஸ். சார்பில் நானும், எடப்பாடி சார்பில் வைத்திலிங்கமும் தான் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை துவங்கினோம். அதன் பிறகு தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து நான், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன்பிறகு பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரியேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மற்றவர்கள் அந்தக் குழுவில் இணைந்து பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த சமயத்தில் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் ஓ.பி.எஸை தனியாக சந்தித்து, அவர் கரங்களை பிடித்துகொண்டு என்னென்ன சொன்னார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். அதில், ‘மீதியிருக்கும் காலத்தில் அவர் (இ.பி.எஸ்.) முதலமைச்சராக இருந்துவிடட்டும். அடுத்த முறை நீங்கள் (ஓ.பி.எஸ்) தான் முதலமைச்சர் எனும் உத்தரவாதத்தை தருகிறோம்’ என தங்கமணி சொன்னார்.
இதுமட்டுமல்ல, ‘இவ்வளவு பெருந்தன்மையாக நீங்க விட்டு கொடுக்கிறீர்கள். நாங்கள் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களின் நிபந்தனைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்டு, உடனடியாக நீங்கள் இணைய வேண்டும் என்பதில் ஆர்வாம் காட்டுகிறோம்’ என்று சொன்னபோது, கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை” என்று தெரிவித்தார்.