Skip to main content

‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் - விசிக வேண்டுகோள்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

vck request management structure namma School Foundation needsbe changed

 

'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்தப் பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என விடுதலைச் சிறுத்தை கட்சி தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்’ என நினைக்கும் தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நோக்கம் பாராட்டத்தக்கது தான் என்றாலும் இது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களைக் கவனத்தில் கொண்டு இதன் நிர்வாகக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

 

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்', 'நான் முதல்வன்'  எனப் பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன.

 

இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்'  என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ’கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது’ எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

 

இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் இருக்கிறது.

 

கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

 

ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'சண்டாளர் சர்ச்சை' - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'Sandalar Dispute'-Recommendation by Tribal Commission to Tamil Govt

சண்டாளர் என்ற சமூக பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய பரிந்துரை அளித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் இனத்தவர்களின் பெயர்களை இழிவான முறையில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் 'சண்டாளர்' என்ற  வகுப்பைச் சேர்ந்த பெயரில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் அட்டவணையில் 48 வது இடத்தில் இந்தச் 'சண்டாளர்' என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளது.

இப்பெயரை பொதுவெளியில் நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கிலோ இனி அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சித்து பாடல் ஒன்றைப் பாடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் இதனைப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்; அடைக்கலம் தந்த விசிக பிரமுகர் உட்பட 6 பேர் கைது

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Rowdies lurking under the bed; 5 people arrested, including a official of vck


கும்பகோணத்தைச் சேர்ந்த விசிக கவுன்சிலர் வீட்டின் கட்டிலுக்கு அடியில் ரவுடிகள் பதுங்கி இருந்த சம்பவமும், கொடுமையான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாத்திமாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விசிக பிரமுகரான அலெக்ஸ். இவருடைய மனைவி கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் சந்தேகப்படும் வகையில் சில நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசிக கவுன்சிலரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனைக்கு அலெக்ஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இங்கு யாரும் பதுங்கி இருக்க வில்லை' என ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் போலீசார் தரப்பு தாங்கள் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று வந்திருப்பதாகக் கூறி வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் சோதனையிட்டனர். அப்போது வீட்டின் பிரதான படுக்கையறையின் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கிங் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, பாலுசாமி, அருண்குமார், அஜய் என்கிற நான்கு பேரையும் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வர செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மொத்தம் 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. குற்றச்செயலில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசிக பிரமுகரின் வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகையில், 'பாத்திமாபுரத்தில் அலெக்ஸ் வீட்டின் எதிரே உள்ள நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். ஏன் இவ்வாறு வேகமாக வருகிறீர்கள் என அலெக்ஸ் தரப்பினர் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது. இதனடிப்படையில் அந்த நபர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அலெக்ஸ் வீட்டில் சோதனை செய்துள்ளனர். போலீசார் பறிமுதல் செய்த ஆயுதங்கள் மாட்டிறைச்சி வெட்டி விற்பதற்காக வைத்திருக்கப்பட்ட கருவிகள்' என்று விளக்கம் தெரிவித்துள்ளனர்.