கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று (02.10.2024) நடைபெற்றது. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய அளவில் மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்து 13 தீர்மானங்களை வாசித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், “அரசமைப்புச் சட்டப்பிரிவு 47இன படி மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி பகிர்வை மத்திய அரசு அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்கு உரியக் கால அட்டவணையை மாநில அரசு அறிவித்திட வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். குடி நோயாளிகளுக்கும், போதைக்கு அடிமையான நோயாளிகளுக்கும் நச்சு நீக்கச் சிகிச்சை அளிக்க டி-அடிக்ஷன் மையங்களை (மறுவாழ்வு)அரசு உருவாக்க வேண்டும். மது மற்றும் போதைக்கு அடிமையான நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் அரசு மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சி.பி.எம். கட்சி சார்பில் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆனி ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.