மக்களுக்கு கல்வி பொருளாதாரம் போன்றவை கிடைத்தால் மக்கள் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றுவர் எனக் கூறியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.
சென்னையிள் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடைத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தேசியக் கொடியை இல்லம் தோறும் ஏற்றுவது என்பது மக்களின் பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மக்களின் கல்வியோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மக்களின் தேசிய அக்கறையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 140கோடி மக்களின் பொருளாதாரத்தையும், கல்வியையும், சமூக அக்கறையையும், இந்த நாடு வளர்த்துக் கொடுத்தால் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலேயே ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எல்லா நாளும் தங்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்றுவான்" என கூறியுள்ளார்.