தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய நிலவரப்படி திமுக 3 எம்பிக்களையும், அதிமுக 3 எம்பிக்களையும் தேர்வு செய்ய முடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நான்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மாற்று ஏற்பாடாக ஒருவரை மனுத்தாக்கல் செய்ய வலியுறுத்தினேன். இருப்பினும் எனது மனு ஏற்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. அதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். வேட்பு மனு ஏற்கப்பட்டதை அடுத்து வைகோ மாநிலங்களை உறுப்பினர் ஆவது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.