அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதற்காக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். எனினும் கட்சியின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தான் இருக்கிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “தொண்டர்கள் பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்து குழப்பம் அடைகிறார்கள். நம் கட்சி இருக்குமா எனச் சந்தேகம் தொண்டர்களுக்கு உள்ளது. கட்சி நன்றாக இருக்கும் போதே ஓபிஎஸ் தர்மயுத்தம் இருந்தார். இருந்தும் கட்சி உடையக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை வந்தது.
மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என நாங்கள் கூறினோம். இதன் பின் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக எடப்பாடி பழனிசாமியை முடிவு செய்தனர். ஆனால் அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆயினும் அவரை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாக நடத்தி விடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்திற்கு இணைபொதுச்செயலாளர் பதவியைத் தருகின்றேன் எனச் சொன்னார். ஓபிஎஸ் அவர் மகனுக்கு மந்திரி பதவி கேட்டார். அதையும் தருகிறேன் எனச் சொன்னார். இதன் பின்னும் பிரச்சனை நீடித்தது.
ஒரு முறை நேரில் வாருங்கள் அதன் பின் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் எனப் பலமுறை அவரிடம் கூறினோம். குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி முதலில் சொல்லுவார். பின் மீண்டும் அழைத்து வைத்தியலிங்கம் இல்லாமல் எப்படி வருவது எனக் கேட்பார். பின் மீண்டும் ஒரு நாள் போன் செய்தார். தன் மகள் வீட்டிற்கு வரச் சொன்னார். நாங்கள் எல்லாம் போவதற்கு முன்னாலேயே அங்கு வைத்தியலிங்கம், மனோ தங்கராஜ், ஜெ.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.
நாங்கள் பன்னீர் செல்வத்தை போனில் அழைத்து நீங்கள் மட்டும் வருவதாக இருந்தால் பேசலாம் எனக் கூறினோம். அதற்கு அவர் “இப்பொழுது தான் சுகர் மாத்திரை சாப்பிட்டேன். சற்று நேரம் உட்காருங்கள் வந்து விடுகிறேன்” எனக் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் வரவில்லை. நான் வருகிறேன் அவர்களிடத்தில் பேசுங்கள் எனச் சொன்னார். நாங்களும் பேச ஆரம்பித்தோம். தயவு செய்து இங்கு தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இயக்கம் ஒற்றுமையாகச் செயல்படக்கூடாது எனக் கூறி வைத்தியலிங்கம் போட்ட ப்ளாண் தான் இவை அனைத்தும்.
நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார், “தொண்டர்களின் மனநிலையை நாம் அறிந்து செயல்படவேண்டும். இன்று திமுக இருக்கின்ற நிலைமையில் நாம் சட்ட மன்றத்தில் திமுகவைப் பாராட்டிக் கொண்டிருந்தால் எந்த தொண்டனாவது நம்முடன் இருப்பானா? இந்த இயக்கம் ஆரம்பித்ததே திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். எம்ஜிஆர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக்கொடுத்த பாடம் திமுக தான் நமக்கு எதிரி. அதை எதிர்க்க வேண்டும் என்பது தான். சட்டமன்றத்தில் அவர்களைப் பாராட்டினால் மக்கள் எப்படி நமக்கு வாக்களிப்பார்கள். ஆக நீங்கள் மக்களின் மனநிலையைப் பாருங்கள்” என்று நத்தம் விஸ்வநாதன் சொன்னார். இவர் இப்படி சொன்னவுடன் வைத்தியலிங்கம் எழுந்து பெரிதாகச் சத்தம் போட்டு நத்தம் விஸ்வநாதனை அடிக்கப்போகிறார்.
எப்படி இவர்கள் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்து இருப்பார்கள். இயக்கம் பிளவுபட வேண்டும் தான் என்பது அவரது எண்ணம். அந்த எண்ணத்தை வைத்தியலிங்கம் நிறைவேற்றிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.