உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், லக்கிம்பூர் எனுமிடத்தில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் மோதி விவசாயிகளைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற பிரியங்கா காந்தி சிறை பிடிக்கப்பட்டார். இதனால், காங்கிரஸார் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். லக்கிம்பூர் விபத்துக்கும், பிரியங்கா காந்தி கைதுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி என்னுமிடத்தில் சாலையில் முழக்கங்களை எழுப்பியபடிச் சென்ற விவசாயிகளின் மீது பின்புறமாகக் காரை ஏற்றி 4 விவசாயிகளின் படுகொலைக்குக் காரணமான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்ய வேண்டும்; அஜய் மிஸ்ராவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்; வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் அக் 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
லக்கிம்பூர் கேரியில் குத்துச்சண்டை போட்டியைப் பார்ப்பதற்காக வருகை தரவிருந்த உத்திரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் முழக்கம் எழுப்பியபடிச் சென்ற விவசாயிகள்மீது பின்னாலிருந்து காரை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்தப் படுகொலை நடப்பதற்கு இந்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கும் அஜய் மிஸ்ராவின் வன்முறைப் பேச்சே காரணமாக இருந்துள்ளது. இந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி இருக்கிறார். அதனால் வெறியூட்டப்பட்ட அவரது மகன் ஆஷிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், அமைதியாகச் சென்ற விவசாயிகளின் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்துள்ளனர். காரை ஏற்றிக் கொலை செய்தது மட்டுமின்றி துப்பாக்கியாலும் சுட்டனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அங்கே கொல்லப்பட்ட குர்வீந்தர் சிங் துப்பாக்கியால் சுடப்பட்டதில்தான் கொல்லப்பட்டார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே, ‘அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் .இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என அவர்கள் கோரியுள்ளனர்.
இந்தப் படுகொலைகளைக் கண்டித்து நாடு முழுவதும் எழுந்துள்ள பெரும் எதிர்ப்பின் காரணமாக வேறு வழியில்லாமல் உத்தரப்பிரதேசக் காவல்துறை ஆஷிஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் அவர் உட்பட எவரையும் இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை. அதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக அரசு கைது செய்து தளைப்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என்பது போலவும், அங்கே அரசியலமைப்புச் சட்டமே நடைமுறையில் இல்லாதது போலவும் ஒரு அராஜக ஆட்சியை யோகி ஆதித்தியநாத் நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆதரவாக உள்ளனர்.
விவசாயிகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களை உடனே கைது செய்ய வேண்டும், இந்த வன்முறைக்குக் காரணமான ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.