நீண்ட இழுபறிக்குப் பிறகு தமிழக காங்கிரசின் மாநில மற்றும் மாவட்ட பதவிகளுக்கான நியமனங்களை அங்கீகரித்து அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் சோனியாகாந்தி.
அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் மற்றும் தேர்தல் நிர்வாகக் குழுவில் 6 பேர், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக 19 பேர், தேர்தல் பிரச்சாரக் குழுவில் 38 பேர், விளம்பரக் குழுவில் 31 பேர், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் 24 பேர், ஊடக ஒருங்கிணைக்கும் குழுவில் 16 பேர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில், மாவட்டத் தலைவர்கள் நியமனங்களை தற்போது ஆராய்ந்து வருகிறது அ.தி.மு.க. தலைமை. அதாவது, காங்கிரசின் மாவட்டத் தலைவர்களில் யார் யாருக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்கும் என விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட அ.தி.மு.க.வில் இந்த விவாதங்கள் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஊர்வசி அமிர்தராஜை உற்றுக் கவனிக்கிறது மாவட்ட அ.தி.மு.க.!
தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்கியுள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதியைக் குறி வைத்து கடந்த 3 மாதங்களாக, பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறார் அமிர்தராஜ். இவரது அரசியல் பின்னணியை அறிந்தே மாவட்டத் தலைவராக இவரை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியும் அடங்கியிருக்கிறது.
அந்த வகையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் ஊர்வசி அமிர்தராஜூக்குத்தான் சீட் கிடைக்க அதிகப்பட்ச வாய்ப்புகள் இருக்கிறது. அதனாலேயே, ஸ்ரீவைகுண்டத்தின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாவட்டத் தலைவருமான அ.தி.மு.க. சண்முகநாதன், ஊர்வசி அமிர்தராஜின் தலைவர் நியமனத்தை உற்றுக் கவனித்துள்ளாராம். இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கான ஆதரவு குறித்து பல புள்ளி விபரங்களை முதல்வர் எடப்பாடிக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிகிறது.