வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் ஏரிகள், தடுப்பணைகள் புனரமைப்பு மற்றும் ஏரிகளை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் உள்ளிட்ட 8 பணிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் காட்பாடி அருகே கழிஞ்சூர் பகுதியில் இன்று அடிக்கல் நாட்டினார். 8 பணிகளும் 139 கோடியே 21 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளன.
நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “குப்பைகளை ஏரிகளில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதுதான் இறுதி எச்சரிக்கை. இனியொரு நாள் யாராவது குப்பைகளைக் கொட்டினால் மக்கள் அந்த லாரியை பறிமுதல் செய்துவிடுங்கள். லாரியை நிறுத்திவிட்டு எனக்கு தகவல் கொடுங்கள். அவர்கள் மேல் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர் நிலைகளை அசுத்தம் செய்வது கண்டிக்கத்தக்க குற்றம். நேற்று நான் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு பகுதியில் ஒரு கம்பெனியின் கழிவுகளை ஒரு மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் அங்குதான் செல்கிறேன். அந்நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள். காட்பாடி எது வேலூர் எது என்றே தெரியாமல் ஆகிவிட்டது. நடுவில் ஓடும் பாலாறு தான் இரண்டையும் பிரித்து வைத்துள்ளது.
ஏரிக்கரைகள் பலப்படுத்தி அகலப்படுத்தி அதன் மீது சாலைகள் அமைக்கப்படும். கழிஞ்சூர் ஏரியில் படகு சவாரி, பார்வைத் தளம் போன்ற அம்சங்கள் கொண்டு வரப்படும். மேலும் வேலூரில் பாலாற்றில் பல்வேறு தடுப்பணைகள், தரைப் பாலங்கள் போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.