முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை பிரதமர் மோடியிடம் அடகு வைத்துவிட்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று (12.02.2021) அவர் வடமதுரைக்கு வருகை தந்து பேசும்போது, “எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனார். கடைசியில் சசிகலா காலையே வாரிவிட்டார். இப்படி முதலமைச்சரானவருக்கு எப்படி மக்கள் பிரச்சனை தெரியும். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகள் அனைத்து வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.
அதைத் தொடர்ந்து, வேடசந்தூர் தொகுதியில் உள்ள எரியோடு மற்றும் வேடசந்தூரில் நடந்த பிரச்சாரத்தின்போது திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, “கரூர் பாராளுமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைத்தீர்கள். அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வேடசந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வெள்ளம், புயல் வந்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.40,000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்டது. ஆனால், வெறும் 1000 கோடி ரூபாய்தான் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய வரிப் பணத்தைக் கேட்டாலும், நிவாரணத் தொகையைக் கேட்டாலும் வழங்கவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாட்டை மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள்” என்று கூறினார்.
அதன்பின் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனியில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், நினைவுப் பரிசாக ஆறு அடி உயரத்தில் வெள்ளி வேலை பரிசாக வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.